ஸ்வீடன் விபத்து: பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

235 0

ஸ்வீடன் நாட்டின் தலைநகரில் இன்று வேகமாக வந்த லாரி பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் டிராட்நிங்கதன் தெருவில் ஆடம்பர பல்பொருள் அங்காடி உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த தெருவில் நேற்று பிற்பகல் ஒரு டிரக், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நடைபாதையில் உள்ளவர்கள் மீது மோதியதுடன், பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து நின்றது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 15 பேர் கயாமுற்றிருக்கின்றனர்.
விபத்து குறித்து விசாரணைக்காக இருவரை அழைத்து செல்லப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். இதை தொடர்ந்து சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களில் போலீசார் ஒருவரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தவரை தான் போலீசார் கைது செய்துள்ளனரா அல்லது விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஸ்வீடன் தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் தெரிவித்துள்ளார்.
டிரக் விபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபென் தெரிவித்திருந்தார். அந்நாட்டின் இந்திய தூதரகத்தின் அருகிலேயே அரங்கேறிய சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.