கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

37 0

ரூபவாஹினி  கூட்டுத்தாபனத்துக்கு  ஜிஐ குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு  சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள்  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க  இன்று (12) நிராகரித்தார். 

வழக்கை ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு அழைக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வழக்கின் விசாரணை  திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்ததாக, முதல் பிரதிவாதி ஊடகத்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு   ஜிஐ  குழாய்களை 9,90,000 ரூபா விலையில் அதன் விளம்பரத் திட்டத்துக்கு கொள்வனவு செய்ததன்  மூலம்   அரசாங்கத்துக்கு  நஷ்டத்தை ஏற்படுத்தியதாக  இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழு  இவர் மீது குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தது.