வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள்

36 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சிகைனகளுக்குத் தீர்வு காணும் செயல்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் நிருவாக  அலுவலர் கந்தன் நிர்மலா தெரிவித்தார்.

விழுது நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் ஸ்கோப் திட்டத்தின் மும்மத இளையோர் முன்வந்து ஓரம் கட்டப்பட்டுள்ள குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகத்தினரின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து ஏனைய சமூகத்துடன் அவர்களை ஒன்றிணைத்து வாய்ப்புக்கள் மற்றும் வளங்களையும் பெற்று நிலைபேறான நல்லிணக்கத்தினை மக்கள் மத்தியில் உருவாக்குதல் இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“ஓரங்கட்டப்பட்ட குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகத்திற்கான இளையோரின் குரல்” எனும் நிகழ்ச்சித் திட்டம் செவ்வாய்க்கிழமை (12) மாலை குஞ்சங்குளம் ஆதிவாசிகள் கிராமத்தில் இடம்பெற்றது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய நிறுவனத்தின் சிரேஷ்ட சமூக ஊக்குவிப்பாளர் எஸ்.சுகிர்தவிழி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளரும் மாவட்ட காணி மத்தியஸ்த குழுத் தலைவரும் கிழக்குப் பல்கலைக்கழக நிபுணத்துவ ஆலோசகருமான கே.குருநாதன், வாகரைப் பிரதேச சிறுவர் மேம்பாட்டு உரிமைகள் அலுவலர் பி.எம்.எம்.காசிம், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.சதீஷ்காந்த், கே சசிதரன், போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி அலுவலர் கே.சுவேந்திரகுமார், விழுது நிறுவன சமூக ஒருங்கிணைப்பாளர் பி.முரளீதரன் குஞ்சங்குளம் கிராம ஆதிவாசித் தலைவர் என்.வேலாயுதம் உள்ளிட்டோரும் ஆதிவாசி கிராம மக்களும் மும்மதங்களைச் சேர்ந்த இளையோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தமது குஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் வேடுவ ஆதிவாசிகள் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தெரியப்படுத்திய அச்சமூகத் தலைவர் வேலாயுதம், அங்கு பூர்வீகமாக வேடுவ சமூகத்தினர் வசித்து வந்த காணிகளை வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது. சுமார் 70 ஆதிவாசி வேடுவ சமூகக் குடும்பங்கள் வாழுகின்ற இந்தக் கிராமத்தில் 40 குடும்பங்களுக்கே காணிகளும் வீடுகளும் உள்ளன.

பல்வேறுபட்ட சிரமங்களுடன் நாங்கள் வாழ்ந்து வருவதை இங்கு வந்துள்ள நீங்கள் கண்கூடாகக் காணமுடியும். காணியில்லாப் பிரச்சினை தொடக்கம் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் மாகாணத்திலுள்ள சகல அதிகாரிகளுக்கும் அறிவித்து வந்துள்ளோம் ஆனால் தீர்வுகள் தான் கிடைக்கவில்லை” என்றார்.

நிகழ்வில் குஞ்சங்குளம் வேடுவ ஆதிவாசிகள் கிராமத்திலுள்ள மக்களின் காணியில்லாப் பிரச்சினைகளுக்கு நிருவாக மட்டத்தில் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் தெளிவுபடுத்தினார்.

தன்னார்வத்; தொண்டு நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த பல தசாப்தங்களாக பின்தங்கிய, அடிமட்ட கிராம மக்களின்  கல்வி, சுகாதாரம், போசாக்கு, தொழில் வாய்ப்பு, பெண்கள் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், நல்லாட்சி, சுகவாழ்வு போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்து வருகின்றது.