தென்மாகாணத்தில் உள்ள மக்களின் நலனுக்காக நன்கொடை உதவிகள் மற்றும் முதலீடுகள் மூலம் மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
தென்மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண ஆளுநரான வில்லி கமகேவை சந்தித்து பிராந்தியத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இம்மாதம் 6 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளதன் மூலம் தென் மாகாணத்திற்கு ஒரு பூரணமான விஜயத்தை மேற்கொண்ட முதல் இந்திய உயர் ஸ்தானிகர் என்ற பெருமையும் பெறுகின்றார்.
இந்த விஜயத்தின் அங்கமாக உயர் ஸ்தானிகர் 2024 மார்ச் 06ஆம் திகதி மாகாண ஆளுநரான வில்லி கமகேவை சந்தித்து பிராந்தியத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பல திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அத்துடன் இம்மாகாணத்தில் உள்ள மக்களின் நலனுக்காக நன்கொடை உதவிகள் மற்றும் முதலீடுகள் மூலம் மேலும் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கும் உயர் ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்தார்.
இதேவேளை இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உதவித்திட்டங்களுக்காக ஆளுநர் உயர் ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ருகுண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரவீந்திரநாத் தாஹூர் கேட்போர் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள ரவீந்திரநாத் தாஹூர் சிலைக்கு உயர் ஸ்தானிகர் அவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்.
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களில் 1500 பேருக்கான இருக்கை வசதிகளைக் கொண்ட ஒரேயொரு பாரிய கேட்போர் கூடம் இதுவாகும்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த கேட்போர் கூடம் 2018ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது.
இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடனான உரையாடலின்போது, கல்வித்துறையில் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்புக்கான விருப்பங்களை வெளிப்படுத்தியிருந்த உயர் ஸ்தானிகர் இப்பல்கலைக் கழகத்துக்கு மேலும் பல வழிகளில் உதவி வழங்குவதற்கான ஆர்வத்தையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்வாங்கி அங்குள்ள 50 கிராமங்களின் மக்களுக்காக இரு விசேட வீட்டுத் திட்டங்களை இந்திய அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றது.
இந்த இரு திட்டங்களின் கீழ் வீடற்றவர்கள், காணிகளற்றவர்கள் மற்றும் குறைவான வருமானங்களை உடைய குடும்பங்களுக்காக 1200 வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் இந்த இரு திட்டங்களினதும் முன்னேற்றகரமான செயற்பாடுகளைக் காண்பதற்காக உயர் ஸ்தானிகர் அம்பாந்தோட்டையில் உள்ள இரு கிராமங்களுக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
உயர் ஸ்தானிகர் அவர்களது தென் மாகாண விஜயமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நிலைபேறான கலாசார தொடர்புகளை சுட்டிக்காட்டுகின்றது.
தேவேந்திரமுனை, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமகாரம ஆகிய இடங்களிலுள்ள விகாரைகளில் வழிபட்ட உயர் ஸ்தானிகர் புத்தபெருமானின் நல்லாசிகளை வேண்டிப்பிரார்த்தித்திருந்தார். அத்துடன் இந்திய இலங்கை மக்களின் உறவுகள் மேலும் வலுவடையவும் அவர் பிரார்த்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

