முதலில் ‘ஜனாதிபதி தேர்தல்’ என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை

97 0

ஜனாதிபதி தேர்தலை வருட இறுதிக்குள் நடத்தும் தீர்மானத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சினிலமவின் புதல்வரின் திருமணத்தில் சாட்சி கையெழுத்திடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தார்.

அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ உரிய நேரத்துக்கு வருவதாக இருந்த போதிலும் ஜனாதிபதி ரணில், திருமண நிகழ்விலிருந்து சென்ற பின்னரே பஷில் ராஜபக்ஷ வந்துள்ளார்.

எனினும், அன்றைய தினம் இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.

உத்தேச தேசிய தேர்தல்கள் மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணி குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல் மூலங்கள் குறிப்பிட்டன. எந்த தேர்தல் முதலில் இடம்பெறும் என்ற ஐயப்பாடு அரசியல் கட்சிகளுக்கு மாத்திரமன்றி நாட்டு மக்களுக்கும் உள்ளன. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய பாராளுமன்ற கொள்கை பிரகடன உரையில் தெளிவாகவே வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்ற விடயத்தை உறுதிப்பட கூறியுள்ளார்.

ஆனால், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் நலன்களை மையப்படுத்தி முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் பிரகாரம் ஜனாதிபதி ரணிலுக்கும், பஷில் ராஜபக்ஷ மற்றும் மஹந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பிலும் தேர்தல் விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தலும் அதனை தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்தப்படும் என்ற தேர்தல் கால அட்டவனையை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தினார். எனினும், இந்த விடயம் குறித்து மீண்டும் கட்சி உறுப்பினர்களுடன் பேசுவதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முதலில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஏற்கனவே எடுத்துள்ளது. எனவே இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றியும் அடுத்த சந்திப்பிற்கான நாட்கள் இறுதிப்படுத்தப்படாமலும் நிறைவடைந்துள்ளது.