போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து மார்ச் 12-ல் அதிமுக மனித சங்கிலி போராட்டம்

25 0

போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகசார்பில் மார்ச் 12-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவிமரியாதை செலுத்தினார். பின்னர்கேக் வெட்டி, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார். ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் சீரழிகிறது. போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக திமுக அரசை கண்டித்தும், போதை பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் அதிமுக சார்பில் மார்ச் 12-ம் தேதி காலை 10 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். ஆளுநரிடம் புகார் மனுவும் அளிக்கப்படும்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். டிஜிபியிடம் பரிசு பெறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

விலைவாசி உயர்வால் மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். ஊடகத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில், ‘நீங்கள் நலமா’ என்று முதல்வர் ஸ்டாலின் கேட்பது வேடிக்கையாக உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது, அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் ஏகமனதாக எடுத்த முடிவு. அதில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி தொடர்பாக எந்த கட்சியுடனும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி அமைந்த பிறகு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியது பற்றி கேட்கிறீர்கள். அவர்களது ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி பெற்றது. நாட்டுக்கு நல்லது செய்தவர்களை யாரும் பாராட்டி பேசுவதில் தவறு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.