பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் தேசிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும்

131 0

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி எதிர்வரும் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தியினரும் இந்த அரசியல் கூட்டணியில் இணைந்துக் கொள்ள வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு கூட்டணியமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிப்பவர்கள் ஆர்வம் காட்டியுள்ள நிலையில் அமைச்சு பதவி இல்லாத பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டால் ஸ்ரீ லங்கா பெரமுனவுக்கு 20 இற்கும் குறைவான ஆசனங்களே கிடைக்கப் பெறும் அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னுரிமை வழங்குவார்.

பொதுஜன பெரமுனவை புறக்கணித்து செயற்படுவதை தற்போதைய நிலையில் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது என பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியும்,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்க வேண்டும் அப்போது தான் நாட்டு உண்மையை விளங்கிக் கொள்வார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி எதிர்வரும் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படும்.ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியை நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை. கூட்டணி என்ற அடிப்படையில் மாத்திரமே ஒன்றிணைந்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த போது சகல எதிர்க்கட்சிகளும் இணக்கமாக செயற்பட்டன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைய நேரிடும். ஆகவே தேர்தலை நடத்த வேண்டாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

இதன் பின்னர் தான் தேர்தல் பணிகளுக்கான நிதி விடுப்பை ஜனாதிபதி முடக்கினார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்ததை போன்று இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தலுக்காகவும் ஒன்றிணைய வேண்டும்.தேசிய மக்கள் சக்தி எமது அரசியல் கூட்டணியில் ஒன்றிணைய வேண்டும் என்றார்.