சாந்தனின் தாயாரிடம் பொட்டம்மான் கூறியது!

69 0

“நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும். அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன் அப்பாவை புலனாய்வுத்துறையின் வாகனங்களுக்குரிய பொறுப்பாளராகவும்  பொட்டம்மான்  நியமித்தார் என மறைந்த சாந்தனின்  சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்.

சாந்தனின் சகோதரான மதிசுதா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது,

இலங்கை, இந்திய இராணுவத்தின் மிக நெருக்கடியான காலத்திலும் அத்தனை போராளிகளுக்கும் உணவு தயாரிப்பதுடன் மறைமுக அரணாக இருந்த எமது இல்லத்தை கல்வீடாக மாற்றுவதற்கு சீமேந்து பைகள் அளித்ததுடன் அதில் குடியமர்த்தி வைப்பதில் பொட்டம்மான் பெரும் பங்காற்றினார்.

பிற்காலத்தில் மல்லாவி வரும்போதெல்லாம் அம்மாவிடம் ஒரு பிடியாவது வாங்கி உண்டு செல்லும் பொட்டு அம்மான் மேற்குறிப்பிட்ட உண்மையை கூறினார்.

சாந்தனை பொலிஸார் தூக்கத்தில் வைத்து கைது செய்தபோது அவர் சயனைட் (நஞ்சு) உட்கொள்ள முற்பட்டார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிவராசண்ணாவின் பணத்தை கையாண்டதைத் தவிர வேறு எந்த விடயத்திலும் எனது அண்ணா சாந்தன் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) தொடர்புபடவில்லை.

சாந்தன் என்பவரின் குற்றச்சாட்டுக்களை தில்லையம்பலம் சுதேந்திரராஜா மேல் போட்டேன் என விசாரணை அதிகாரியே பகிரங்கமாக கூறி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

மறைக்கப்படும் மற்றும் திரிபுபடுத்தப்படும் வரலாறுகளை, மற்றவர்களுக்கு பாதிப்பற்ற வகையில் சொல்ல வேண்டிய கடமையானது குடும்ப உறுப்பினரான எனக்கு என்றும் உண்டு.

இத்தகவல்கள் அவரிடம் நேரடியாகவும், பொட்டு அம்மான் மூலமாகவும், அவரது சக போராளிகளூடாகவும் பெறப்பட்டதுடன் நான் குறிப்பிடுபவை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவை மட்டுமேயாகும்.

சாந்தன் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் 1988 ம் ஆண்டு உயர்தர பிரிவில் கற்கும் காலத்திலேயே பாடசாலைச் சீருடையுடன் இந்திய இராணுவத்துக்கு எதிரான பல தாக்குதல்களை திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார்.

உயர்தர பரீட்சையின் பின் நேரடிப் போராளியாக பணியாற்றியிருக்கிறார். வணிகவியல் உயர்கல்விக்காக படகு மூலம் இந்தியா சென்றவர் தனக்களித்த பணியாக EPRLF அலுவலகத்துக்கு முன் வீட்டில் வாழ்ந்ததுடன் பத்மநாபாவின் மரணத்திற்கு முதலே நாடு திரும்பியிருக்கிறார்.

இத்திட்டமிடல் தொடர்பாக அல்பிரட் துரையப்பா முதல் காமினி திசாநாயக்கா வரை என்ற தொடரில் அற்புதனால் கால ஆதாரங்களுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

பத்மநாபா கொலை வழக்கு தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் சாந்தனுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.