ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று புதன்கிழமை (6) பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கமைய மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வில் பொலிஸ் அதிகாரத்தைத் தவிர ஏனையவற்றை வழங்குவதற்காகப் பாராளுமன்றத்தில் கூட்டு இணக்கப்பாட்டை ஏற்படுத்தப்படுத்தும் நோக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அந்த வகையிலேயே புதன்கிழமை (6) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஏ.எல்.எம்.அதாஉல்லா, எம்.சி. பைசால் காஸிம், செய்யத் அலிஸாஹிர் மௌலானா, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுனபின் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அம்பாறை மாவட்ட ஆசிரியர் இடமாற்ற பிரச்சினை, கிழக்கு மாகாண சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளின் நியமன விடயங்கள், காணி பிரச்சினைகள், மூடப்பட்டுள்ள காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதி வழங்கும் விவகாரம், மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேம்பாட்டு விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

