ஜனாதிபதி நெருப்பில் குதிக்கவில்லை : திருடர்கள் கூட்டத்திற்குள் குதித்துள்ளார்

117 0

வீழ்ச்சியடைந்த நாட்டை பாதுகாக்க யாரும் முன்வராத நிலையில் தான் அந்த நெருப்பு பிழம்பில் குதித்ததாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவர் நெருப்பு பிழம்பில் குதிக்கவில்லை மாறாக திருடர்கள் குழுவில் குதித்துள்ளார். அவர் நாட்டை வீழ்ச்சியடையச் செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரையில் புத்தரின் உன்னத வார்த்தைகளை பிரயோகித்து அவரது தொலைநோக்கு பயணத்தை நனவாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். தொங்கு பாலம் குறித்து பேசிய ஜனாதிபதி வங்குரோத்து நிலையை ஏற்படுத்தியவர்களை பாதுகாத்து வருகிறார்.

நாட்டில் வங்குரோத்து நிலையை ஏற்படுத்திய பேரழிவை உருவாக்கியவர்களிடமிருந்து நாட்டு மக்களுக்கு நட்டஈடு பெறுவதற்கான வசதிகளைக்கூட தற்போதைய ஜனாதிபதியே நிறுத்தியுள்ளார்.

பேரழிவை உருவாக்கிய தலைவர்கள் திருடிய சொத்துக்களையும் இந்த ஜனாதிபதியே பாதுகாத்து வருகிறார். நாட்டை சீரழித்த ராஜபக்‌ஷக்கள் அந்த தொங்குபாலத்தில் மேலே வர உதவுபவரும் ஜனாதிபதியாகும். அதனால் ஜனாதிபதியின் செயற்பாடுகளால் 220 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

அத்துடன் நாட்டை பாதுகாக்க பாரிய தீ பிழம்புக்குள் பாய்ந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆனால் அவர் உண்மையில் பாய்ந்தது தீ பிழம்புக்குள் அல்ல. திருடர்கள் கூட்டத்திற்குள் ஆகும். ஒருபோதும் தனக்கு வாக்குகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை திருடர்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் மூலம் ஒடுக்குமுறைகளை செய்ய முயற்சிக்கிறார்.

அத்துடன் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவையை நிறைவேற்றுத்துறையின் பொம்மையாக மாற்ற முயற்சிக்கிறார். சபாநாயகருடன் இணைந்து அரசியலமைப்பை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்த கருத்தும் இப்போது கூறுவதில்லை. தொங்கு பாலத்தில் ஏறி மேலே வந்தவர்கள் நாட்டை சீர்குலைத்த ராஜபக்‌ஷ குழுக்களே ஆகும்.

எவ்வாறாயினும் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது. பொருளாதார முன்னேற்றம் தொடர்பான வேலைத்திட்டத்தையே எதிர்பார்த்துள்ளோம். அனைவரையும் இணைத்துக்கொண்ட தேசிய அபிவிருத்தி திட்டத்தை எமது அரசாங்கத்தில் நாங்கள் ஏற்படுத்துவோம் என்றார்.