பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

27 0

 பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் முஸ்லிம் – நவாஸ் கட்சித் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை அவர் பதவி ஏற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் ‘‘பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துகள்’’ என கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாப் கட்சியினர் (பிடிஐ) பொதுத் தேர்தல் நடைபெற்ற பிப். 8-ல் குற்றம்சாட்டினர்.

இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை ஷெபாஸ் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் – நவாஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையைப் பெறவில்லை. என்றாலும் அதிக இடங்களைப் பெற்றுள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

ஷெபாஷ் ஷெரீபுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி, முடஹித்தா குவாமி இயக்கம் -பாகிஸ்தான், இஸ்டேகம் இ பாகிஸ்தான் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-க்யூ, பலுசிஸ்தான் அவாமி கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ஜியா, தேசிய கட்சி ஆகிய 7 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷெரீப் 201 வாக்கு கள் பெற்று வெற்றிபெற்றார். இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்றார்.