தவறவிட்ட செல்போனை கண்டுபிடித்துத் தரக்கோரி 3 காவல் நிலையங்களை அணுகியும் போலீஸார் புகாரை பெறாமல் இளைஞரை அலைக்கழித்துள்ளனர். சென்னை புழல் பகுதியை சேர்ந்த சூர்யா (26) என்பவர், நேற்று முன்தினம் இரவு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கொளத்தூர் சென்றுவிட்டு திரும்பும்போது, தனது செல்போனை தவறவிட்டுள்ளார்.
காவல் எல்லை பிரச்சினை: இதுபற்றி புகார் அளிக்க புழல் காவல் நிலையத்துக்கு சென்றபோது, அங்கிருந்த காவலர்கள், `போன் தொலைந்ததாக கூறும் பகுதி ராஜமங்களம் காவல் எல்லைக்கு உட்பட்டது. அங்கு சென்றுபுகார் கொடுங்கள்’ என்றனர்.
ராஜமங்களம் காவல் நிலையம் சென்றபோது, மாதவரம் சென்று புகார் கொடுங்கள் என கூறியுள்ளனர். இரவு 10.30 மணி அளவில் மாதவரம் காவல் நிலையம் சென்றபோது, வெளிப்பக்கமாக பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால், அந்த இளைஞர் எங்கே புகார் தருவது என தெரியாமல் தவித்துள்ளார்.
இதனிடையே, தனது போனில்கூகுள் `ஃபைண்ட் மை போன்’(Find my phone) செயலி மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருந்ததால், அதை வைத்து போன் எந்த பகுதியில் இருக்கிறது என அந்த இளைஞர் பார்த்துள்ளார். அது தி.நகர், சைதாப்பேட்டை, நந்தனம் பகுதிகளை காட்டியது. போன் சுவிட்ச் ஆப் செய்யப்படவில்லை. ஆனால்,அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்கவில்லை.
நள்ளிரவு 12 மணி அளவில் மீண்டும் தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் ஒருவர் பேசியுள்ளார். கீழே கிடந்த போனை எடுத்தவர் ரெட்டேரி பகுதியில் வசிக்கும் மாநகராட்சி பெண் துப்பரவு பணியாளர் என்றும், அவர் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருப்பதாகவும், வந்து போனை வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார். மகிழ்ச்சி அடைந்த இளைஞர் உடனே அங்கு சென்று போனைபெற்றுக்கொண்டு, அந்த பெண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

