
நாவலபிட்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குறித்த புகையிரத நிலையத்தின் இரு சேவையாளர்கள் தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த 5 ஆம் இலக்க பொடிமெனிக்கே புகையிரதத்தில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் இருவர்மீது நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி புகையிரத நிலைய பொது கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டிலிருந்து வருகை தந்ததாகக் கூறப்படும் சுற்றுலாபயணிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருர்து வருகைதந்த குறித்த புகையிரதத்தில் எல்ல பிரதேசத்துக்கு செல்வதற்காக பேராதனையில் முதலாம் வகுப்பில் குறித்த சுற்றுலாப் பயணிகள் ஏறியுள்ளனர்.
இதன்போது அங்கு மேற்கொள்ளப்பட்ட பயணச்சீட்டு பரிசோதனையில் குறித்த சுற்றுலாப் பயணிகள் இருவரில் ஒருவருக்கு மட்டுமே பயணச்சீட்டு இருந்துள்ளது.
இதன்போது புகையிரத கட்டுப்பாட்டாளர் குறித்த சுற்றுலாப் பயணிகளை புகையிரதத்தை விட்டு இறங்குமாறு பணித்துள்ளார். அதற்கு அவர்கள் எதிர்ப்பு காட்டியதையடுத்து இதுகுறித்து நாவலப்பிட்டிப் புகையிரத நிலைய நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஊழியர்கள் குழு ஒன்று புகையிரதத்துக்குள்ளிருந்த சுற்றுலாப் பயணிகளை அடித்து கீழிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

