கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று அலரி மாளிகைக்குள் நுழைந்த இருவர்

108 0

கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார்.

இந்த இரு நபர்களும்  சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மென்பொருள் பொறியியலாளர்  ஒருவரும்  கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற போது அவர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.

இதன்போது, பிரதமரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.