சமாதானத்தை முன்னிலைப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும்!

130 0

வெளிநாட்டுக் கொள்கையில் நடுநிலைமை, சமாதானத்தை ஊக்குவிப்பது மற்றும் அனைத்து வகையிலான பாகுபாடுகளையும் ஒழிப்பது போன்றவற்றில் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என நடுநிலைக் கொள்கைக்கான உறுப்பு நாடுகளின் பாராளுமன்றங்களின் தலைவர்களுக்கான மாநாட்டில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நிகழ்நிலை மூலம் உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

‘சமாதானம் மற்றும் கலந்துரையாடலை பலப்படுத்துவதில் பாராளுமன்ற ஒத்துழைப்பின் வகிபாகம்’ என்ற தொனிப்பொருளில் துருக்மெனிஸ்தான் பாராளுமன்றத்தினால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், பல்வேறு நாடுகளுடைய பாராளுமன்றங்களின் சபாநாயகர்கள்,பிராந்திய,சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

சமாதானத்தைக் கட்டியெழுப்புவது மற்றும் மோதல்களைத் தடுப்பது போன்றவற்றில் பாராளுமன்றங்களின் வகிபாகம் மிகவும் முக்கியமானது என இங்கு உரையாற்றிய சபாநாயகர் வலியுறுத்தினார்.

‘ஜனநாயக மற்றும் பிரதிநிதித்துவ அரசியல் கட்டமைப்பானது கலகங்களைத் தடுப்பதற்கு உதவுவது மாத்திரமன்றி மோதல்களுக்குப் பின்னர் சமாதானத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் முக்கியமானது’ என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

பாராளுமன்றங்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்கள் மத்தியில் விளிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதற்கும், விசாரணைகளை ஊக்குவித்து, சாட்சியங்களைக் கோருவதற்குமே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

விசேடமாக, தகவல்களைத் தெரிவிப்பதற்கும், அறிவூட்டுவதற்கும் மற்றும் ஈடுபாடுகளை அதிகரிக்கச் செய்வதற்குமான இடத்திலேயே சமூக ஊடகங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பெலாரஸ், கானா,ரஷ்யா, கட்டார்,மொரோகோ மற்றும் கசக்ஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பாராளுமன்றங்களின் தலைவர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் செயலாளர் நாயகம், சீன மக்கள் குடியரசின் பிரதிநிதிகள்,உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களின் ஒளிப்பதிவுகளும் இங்கு பகிரப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடல்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதால் பாராளுமன்ற ஜனநாயகம் முக்கியமானது என ஏனைய நாடுகளின் சபாநாயகர்கள் வலியுறுத்தினர்.