பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சிவில் பிரஜைகள் மூவரிடம் சிங்கள முறைமையில் தலை வணங்கி மன்னிப்பு கோரியுள்ளார்.
பொலிஸ் திணைக்களம் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளமை கவலைக்குரியது.பொலிஸ் சீருடை,அடையாள அட்டை தன்வசம் உள்ள காரணத்தால் எதனையும் செய்யலாம் என்ற மனநிலையில் இருந்துக் கொண்டு அதிகாரிகள் செயற்பட கூடாது.சிவில் ஆடையுடன் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புக்களை உத்தியோகபூர்வ கடமை என்று கருத முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டிய பொலிஸ் உப பரிசோதகருக்கு எதிராக தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
2021 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த இந்த உப பொலிஸ் பரிசோதகர் குறித்த தனியார் நிறுவனத்துக்குள் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் சிவில் ஆடையுடன் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுடன் பலவந்தமான முறையில் குறித்த தனியார் நிறுவனத்துக்குள் உள்நுழைந்துள்ளார்.
தனியார் நிறுவனத்துக்குள் சென்று ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த சட்டத்தரணி மற்றும் நிறுவனத்தின் மனித உரிமை பிரிவின் இரண்டு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் முதல் பிரதிவாதியாக இந்த பொலிஸ் உப பரிசோதகரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பொலிஸ் உப பரிசோதகர் மொஹமட் லபார் ,கே.கே சுவர்ணாதிபதி ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் திறந்த மன்றில் முறைப்பாட்டாளர்களிடம் சிங்கள முறையின் படி தலை வணங்கி மன்னிப்பு கோரியுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதியரசர்கள் குழாம் ‘பொலிஸ் திணைக்களம் தொடர்பான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.இதனை பொலிஸ் திணைக்களத்தை நீதிமன்றம் அவமதிப்பதாக கருத கூடாது.உண்மையில் இது கவலைக்குரியது.
சிவில் பிரஜைகளுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன.தமது உரிமைகள் தொடர்பில் பேசுவதற்கு பிரஜைகளுக்கு உரிமையுண்டு.பொலிஸார் சேவையின் போது தமது சேவையின் சட்டங்கள்,ஒழுங்கு விதிகள் என்பனவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.அநாவசியமான முறையில் அதிகாரத்தை பிரயோகிப்பது தவறானது என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அதிகாரத்தை தவறான முறையில் பிரயோகிப்பதால் நடைமுறையில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
பொலிஸ் அதிகாரி ஒருவர் கடமை சுற்றிவளைப்புக்கு செல்லும் போது பொலிஸ் சீருடை மற்றும் பொலிஸ் அடையாள அட்டையுடன் சேவையில் ஈடுபட வேண்டும்.அவ்வாறு இல்லாமல் சுற்றிவளைப்புகளுக்கு செல்வது உத்தியோகபூர்வ கடமையல்ல அது பாதாள சுற்றிவளைப்பு என பொதுமக்கள் குறிப்பிடுவார்கள் என்றும் நீதிபதிகள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு பாதாள குழுவினருக்கும் சுற்றி வளைப்பில் ஈடுபட முடியும் என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள் குழாம்.நாட்டின் அரச அதிகாரிகள் இவ்வாறான நிலையில் செயற்பட கூடாது எனவும் சுட்டிக்காட்டினர்.
பொலிஸ் சீருடை மற்றும் பொலிஸ் அடையாள அட்டை தம்வசம் உள்ளது என்றபடியால் எதனையும் செய்ய முடியும் என்ற மனநிலையில் இருந்துக் கொண்டு அதிகாரிகள் செயற்பட கூடாது.
முறைப்பாடு கிடைத்த காரணத்தால் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளாமல் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குழாம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளில் இனி ஈடுபட வேண்டாம் என உப பொலிஸ் பரிசோதகருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் குழாம்.பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் திறந்த மன்றில் சிங்கள முறைமைக்கு அமைய மன்னிப்பு கோருமாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். மனுதாரர்களிடம் பொலிஸ் பரிசோதகர் திறந்த மன்றில் மன்னிப்பு கோரியதன் பின்னர் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

