யாழ். இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மார்ச் 5இல் போராட்டம் – எம்.வி.சுப்பிரமணியம்

98 0

வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.

இன்று (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

அந்த வகையில் இந்த போராட்டமானது 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும்.

இந்த போராட்டத்தை ஆக்கபூர்வமான, ஒரு உணர்ச்சிபூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால், இங்கே உள்ள பல அமைப்புகள், அனைத்து கடல் தொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதில் முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது. அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் நடித்துக்கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அது எங்களுக்கு தெரிந்த விடயம்.

வட புலத்திலே வாழ்கின்ற மீனவர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும், அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும், அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில்முறையுமே காரணமாக இருக்கின்றது.

இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்கின்றார்கள். வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டு செல்கின்றார்கள்.

அன்று நடந்த பேச்சுவார்த்தையில் ‘நீங்கள் உங்களது எல்லைக்குள் மீன் பிடிக்காமல் ஏன் எங்களது எல்லைக்குள் வருகின்றீர்கள்’ என கேட்டபோது ‘எங்களது எல்லையில் மீன்கள் இல்லை, வளங்கள் அழிந்துவிட்டன. ஆகையால் தான் இங்கே வருகின்றோம்’ என சொல்கின்றார்கள். ஆனால் அன்னியச் செலாவணியை ஈட்டுவதற்காக சென்னை பட்டினத்தில் இருந்து வெளிநாட்டுக்கு மீன்களை அனுப்புகின்றார்கள். அது எங்கே பிடிக்கப்பட்ட மீன்?

எங்களுடைய வளங்களை அள்ளிக்கொண்டு போய் நீங்கள் வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டு, அங்கிருந்து வருகின்ற அந்நியச் செலாவணியை எடுத்து உங்களுக்கு மட்டுமல்ல. நாடு முழுவதற்கும் கொடுத்துவிட்டு இப்பொழுது நாங்கள் எங்களுடைய வலைகள் அறுந்துவிட்டன என்று ஆதங்கப்பட்டு ‘இப்படி செய்தவர்களது படகுகளை எரிக்க வேண்டும், இப்படி செய்தவர்களை அடித்து துரத்த வேண்டும்’ என்ற ஆதங்கத்தில் பேசினால் நீங்கள் கோபப்படுகிறீரகள். அறுக்கப்பட்டவர்கள் அழுகின்றோம். காரணம் இருக்கிறது. அறுத்துப்போட்டுப் போன நீங்கள் கோபப்படுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

ஒரு நாளைக்கு மூன்று தடவை உங்களது படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்கின்றன. சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடிக்கின்றீர்கள். இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும்.

அந்த வகையில் ஒரு படகு ஒரு வருஷத்துக்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக்கொண்டு போகின்றது. இதை உங்களது 2500 படகினால் பெருக்கிப் பாருங்கள். எத்தனை ஆயிரம் கோடியை நீங்கள் கொண்டு போகிறீர்கள் என்று.

ஏறக்குறைய 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரிச் செல்கின்றீர்கள். எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய்விட்டீர்கள். ஆனால் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள். எங்களது கடலை எங்களிடம் விடுங்கள். நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகிறோம் என்றார்.