கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை முழுமையாக இயக்குவது தொடர்பாக உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை, சிஎம்டிஏ அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும், முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடப் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்து துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம், இணை போக்குவரத்து ஆணையர் ஆ.ஆ.முத்து, மாநகர போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் யுவராஜ் மற்றும் ஆம்னி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில், ஆம்னி பேருந்துகளுக்கு அதிகளவு அபராதம் விதிக்கக் கூடாது என்ற உரிமையாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிறுத்தத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் சென்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஏப்ரல் மாதத்துக்குள் நிறுத்தம் தயாராகும் என உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் உறுதியளித்தனர்.

