புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் சட்டவாட்சிக்கு விடுக்கும் பாரிய சவால்

34 0

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நபரை பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ளமை சட்டத்தின் ஆட்சிக்கு சவாலாக காணப்படுவதுடன் பாரிய அச்சுறுத்தலாகவும் காணப்படுகிறது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனத்துடன் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகிறது.மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட நபரை பொலிஸ்மா அதிபராக நியமித்துள்ள நிலையில் சட்டவாட்சி கோட்பாட்டை முறையாக செயற்படுத்துவது பாரியதொரு அச்சுறுத்தலாகும்.

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் அரகலயவின் போது எவ்வாறு செயற்பட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சட்டவாட்சியை பாதுகாக்கும் நபரை பொலிஸ்மா அதிபராக நியமிப்பது அத்தியாவசியமானது.

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளும் தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் தன்னிச்சையாகச் செயற்படுகிறார். அரசியலமைப்பு பேரவையின் அதிகாரங்களும் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் சட்டவாட்சி கோட்பாட்டை உறுதிப்படுத்துவது சவால்மிக்கதாகும் என்றார்.