ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே இனி அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிப்பார் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற 12ம் தேதி நடக்கிறது. தேர்தலில் அதிமுக 3 அணிகளாக போட்டியிடுகிறது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் 2, 3வது இடத்துக்கு அதிமுகவில் இருந்து பிரிந்த இரு அணிகளும் கடுமையாக போட்டி போடுகின்றன.
இரு அணிகளில் யார் அதிக வாக்குகள் வாங்குவார்களோ, அவர்களுக்கே கட்சியும், சின்னமும் கிடைக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது. மேலும், டி.டி.வி.தினகரன் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தால், முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் அபாயமும் உள்ளது. இதனால் ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எப்படியும் ஓபிஎஸ் அணி வேட்பாளரை விட அதிக வாக்குகள் வாங்கி விட வேண்டும் என்று தினகரன் அணியினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்காக, அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு சாதகமான ஓட்டுக்கள் எவை என்பதை ஏற்கனவே கண்டறிந்துள்ள தினகரன் அணியினர், கடந்த செவ்வாய் இரவு ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் வீடு வீடாக வினியோகம் செய்தனர். இந்த தகவல் தெரிந்து தடுக்க முயன்ற பொதுமக்கள், திமுகவினரை அதிமுகவினர் தாக்கியுள்ளனர். ரவுடிகள் குவிப்பு: தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ள ரவுடிகளும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக, ஓபிஎஸ் அணி, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் செய்தனர். ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி மாற்றப்பட்டார். இப்போது கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, துணை கமிஷனர்கள் ஜெயக்குமார், செல்வக்குமார் மற்றும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். மைக்ரோ அப்சர்வர்கள்: மேலும், எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத அளவில் 10 தேர்தல் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இதில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவு கணக்கு மற்றும் வேட்பாளர்களுக்கு எந்த வகையில் பணம் வருகிறது என்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் வேட்பாளர்களின் பிரசாரம் உள்ளிட்ட பணிகளை கவனிப்பார்கள். போலீஸ் பார்வையாளர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கண்காணிப்பார்கள். இதுதவிர, 30 வெளிமாநிலத்தை சேர்ந்த மைக்ரோ அப்சர்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான பறக்கும் படையினரும் ஆர்.கே.நகரில் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தனி அதிகாரி: இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தில் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பிரிவின் இயக்குநராக உள்ள ஐஆர்எஸ் அதிகாரி விக்ரம் பாத்ரா என்ற அதிகாரியை நியமித்துள்ளது. இவர், நேற்று மதியம் 12.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து, ஆர்.கே.தேர்தல் பணியை கவனிக்க தொடங்கினார். மேலும், நேற்று மாலை ஆர்.கே.நகர் தொகுதிக்கு தனி அதிகாரி விக்ரம் பாத்ரா நேரடியாக சென்று, தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்தபடி, ஆர்.கே.நகரில் பணியாற்றும் அனைத்து பிரிவு தேர்தல் அதிகாரிகளையும் கண்காணிக்க இவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முழு கட்டுப்பாடு: இவர்தான் இனி ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவார். அனைத்து அதிகாரிகளும் அவரது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இனி, ஆர்.கே.நகர் தொகுதி தொடர்பான புகார்களையும் அவரே கவனிப்பார். தனது அறிக்கையை இனி நேரடியாக டெல்லிக்கே அனுப்பி அவரே தனியாக முடிவு எடுப்பார். இந்த தேர்தல் பணிகளை தற்போது தேர்தல் அதிகாரியாக உள்ள ராஜேஷ் லக்கானி கவனிக்கமாட்டார் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதே நடவடிக்கையை ஆர்.கே.நகரிலும் எடுக்கும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழகத்தில் ஒரு தொகுதியில் நடக்கும் தேர்தலை கூட நியாயமான முறையில் நடத்த முடியவில்லை என்று கெட்ட பெயரை ஏற்படுத்தும். அதனால், தேர்தல் ஆணையம் சவாலாக எடுத்து, வெளிமாநில அதிகாரிகளை குவித்து நேர்மையான முறையில் தேர்தலை நடத்த தயாராகி வருகிறது. அதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் எக்காரணத்தை கொண்டும் தேர்தல் ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர்.

