எமது கூட்டணியில் சஜித்தும் இணையலாம் – ஐ.தே.க. செயலாளர் பாலித்த ரங்கே பண்டார நம்பிக்கை

22 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அமைக்க இருக்கும் பரந்துபட்ட கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் எம்முடன் இணைந்துகொள்ள இருக்கின்றனர். அதன் பிரகாரம் காப்போக்கில் சஜித் பிரேமதாசவும் இணைந்துகொள்ள இடமிருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்படுகையில்,

ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து மேற்கொள்ள இருக்கும் ஆரம்ப கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி குருணாகலையில் நடத்த இருக்கிறோம். இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் எம்முடன் கைகோர்க்க இருக்கி்ன்றனர். அதனைத்தொடர்ந்து நாங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

அதேநேரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. 80க்கும் மேற்பட்ட அமைப்புகள் எங்களுடன் கலந்துரையாடி இருக்கின்றன. அவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றன.அதேபோன்று சிவில் அமைப்புக்கள் பல  சிறிகொத்த தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலநதுரையாடியபோது தங்களின் ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளன.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்துக்கொண்டு பரந்தளவிலான கூட்டணி அமைத்தே போட்டியிட தீர்மானித்திருக்கிறோம். அது தொடர்பான கலந்துரையாடல்களும் தற்போது இடம்பெற்று வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நாங்கள் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம். எமது கூட்டணியில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் இணைந்துகொள்வார்கள். எதிர்காலத்தில் சஜித் பிரேமதாசவும் எம்முடன் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பல தலைவர்கள்  காலப்போக்கில்  மீண்டும் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் சஜித் பிரேமதாவுக்கும் இது பொருந்தும். அதனால் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைததுக்கொண்டு அமைக்கப்படும் கூட்டணியில் ரணிவ் விக்ரமசிங்க சுயாதீன உறுப்பினராக களமிறங்குவார்.

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப  ரணில் விக்ரமசிங்க சிறந்த வேலைத்தி்ட்டத்தை அமைத்து நடவடிக்கை எடுத்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். எனவே மக்கள் ரணில் விக்ரமசிங்கவையே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே அரசியல் கட்சிகள் சிவில் அமைப்பினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருகின்றனர் என்றார்.