இலங்கை மத்திய வங்கியின் நிர்வாக சபையின் அங்கீகாரத்துடனும், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தமது ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாகக்கூறி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மத்திய வங்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அதேவேளை இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக எழுத்து மூல அவகாசம் கோருமாறு நிர்வாக சபையினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைவாக, நிதியமைச்சராகக் கடமையாற்றும் ஜனாதிபதிக்கு கடந்த 22 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பவைத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அவகாசத்தின் பின்னர் உரிய பாராளுமன்றக்குழுவின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க மத்திய வங்கி தயாராகவுள்ளதாக அவ்வறிக்கையில் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

