ராமேஸ்வரம் மீனவர்கள் 2ஆவது நாளாக இன்றும் உண்ணாவிரதம்

167 0

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக இன்று (25) தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தூத்துக்குடிக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக இந்திய கடல் எல்லையை தாண்டிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து, கைதான ஐந்து மீனவர்களும் நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், 2018ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை வசமுள்ள 151 விசைப் படகுகளை விடுவிக்கக் கோரியும் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் மற்றும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் நேற்று (24) காலை 10 மணி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

மீனவர்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.

இப்போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மீனவர்களின் இந்த போராட்டம் காரணமாக  தங்கச்சி மடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தால் கைதான மீனவர்கள் விடுதலை செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நேற்றிரவு முழுவதும் உண்ணாவிரதம் கைக்கொண்டனர்.