சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணம்?

39 0

முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை இந்த சந்தர்ப்பத்தில் அறிவிக்க வாய்ப்பில்லை என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என வலியுறுத்தி நீதவான் இதனை தெரிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக வீதியின் கெரவலபிட்டிய பிரதேசத்தில் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமான வீதி விபத்து தொடர்பில் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக சனத் நிஷாந்தவின் மனைவி சார்பில் ஆஜரான தனராஜ் சமரக்கோன் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு சனத் நிஷாந்தவின் மனைவியின் உரிமைகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது, ​​விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் இதுவரை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் மரணத்திற்கான காரணத்தை வெளியிட முடியாது என நீதவான் தெரிவித்தார்.

விபத்து இடம்பெற்ற போது அந்த இடத்தை பார்வையிட வேண்டிய அவசியமில்லை என்ற போதும், விபத்து இடம்பெற்ற ஜனவரி 24 ஆம் திகதி தான் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதாக நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்ததாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுக்குமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்த நீதவான், இந்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டுள்ளார்.