காலி முகத்திடலை கசினோ சூதாட்டத்துக்கு வழங்கவில்லை

116 0

காலி முகத்திடல் ‘போராட்ட களம்’ நிலப்பகுதியை கசினோ சூதாட்ட நடவடிக்கைகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்ட கருத்து பொய்யானது.

நாட்டுக்கு முதலீட்டாளர்களை அழைத்து வரும் போது அதற்கு  தடையேற்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் எதிர்க்கட்சியினர் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடந்த செவ்வாய்க்கிழமை (20 ஆம் திகதி) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நகர அபிவிருத்தி அதிகார சபை காலி முகத்திடலில் உள்ள நிலப்பகுதியை கசினோ சூதாட்டத்திற்கு வழங்க  நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசும்பாயே கட்டிடத்தை  வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதும் பிரச்சினைக்குரியது என்று குறிப்பிட்டிருந்தார்.இவரின் இந்த கருத்து முற்றிலும் பொய்யானது.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக 2022.11.14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கைகள்  2023.01.19 ஆம் திகதி இடம்பெற்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை ஆராயப்பட்டன.பொருளாதாரம்,சமூக  மற்றும் சுற்றாடல் ஆகிய காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பொருத்தமான முதலீடுகளை மாத்திரம் தெரிவு செய்ய உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காலி முகத்திடலில் உள்ள நிலப்பரப்பு வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்படவில்லை.கொழும்பு -03 பாலதக்ஷ மாவத்தையில் உள்ள 01 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்ய பாலி இன்வெஸ்ட்மென்ட் தனியார் நிறுவனம் முன்னிலையாகியுள்ளது.

இதற்கமைய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு  அதிகார சபைக்கு சொந்தமான காணியை நேரடியாக வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளுக்கு அமைய  2024.02.16 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஆகவே நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் முறையற்ற வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு  வழங்கப்படுவதாகு முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன்.

வெளிநாடுகளில்  உள்ள இலங்கையர்களை,நாட்டுக்கு  பணம் அனுப்ப வேண்டாம் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் வலியுறுத்தினார்கள்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்தது.பொருளாதார நெருக்கடியின் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை தருகிறார்கள்.

முதலீடுகளை முன்னெடுக்கிறார்கள்.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாள்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறான நிலைக்கு நாமும் செல்லாவிடின் வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது  என்றார்.