புதுவை சட்டப்பேரவையில் ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்: திமுக, காங்., வெளிநடப்பு

45 0

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (பிப்.22) ஐந்து மாத செலவுக்கான ரூ. 4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுவை சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது.துவக்கத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு குறித்து இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி வாசித்தார். அதையடுத்து காங்கிரஸைச் சேர்ந்த வைத்தியநாதன், திமுகவைச் சேர்ந்த நாஜிம், சுயேட்சை எம்எல்ஏ நேரு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேசினர். சிலை அமைக்க கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து மறைந்த எம்எஸ் சுவாமிநாதன், பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரின் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத செலவினங்களுக்கு ரூ. 4634 கோடி 29 லட்சத்து 89 ஆயிரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுந்து பேசும்போது, “மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டார்கள். முழு பட்ஜெட்டை முயற்சி எடுத்திருந்தால் போட்டிருக்கலாம். ஆளுநர் பிரச்சினையால் அனுப்பவில்லையா. பத்து ஆண்டுகள் பின்தங்கிவிட்டனர். வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அலட்சியமாக கோஷ்டி பூசலால் தவற விட்டுள்ளீர்கள். புதுச்சேரிக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. 3 நாட்களாவது கூட்டத்தை நடத்தலாம். கலந்து பேசினால் அதிகாரிகளுக்கு தெரியும். அடுத்து ஆறு மாதங்கள் கழித்துதான் கூட்டத்தை நடத்துவீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன்” என்றார்.

இந்நிலையில் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அறிக்கைகளை வாசித்தார். அதையடுத்து எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.