வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிகளுக்காக பெண்களை அனுப்புவதை முற்றாக நிறுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை மேம்படுத்தும் வகையில் அதிக திறன் மற்றும் அதிக சம்பளம் பெறும் வேலை வாய்ப்புகளை நோக்கி நகர்த்துவதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள இலங்கை வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் நியாயமற்ற தொழில் நிலைமைகள் பற்றிய அறிக்கைகள் சீர்திருத்தத்திற்கான அழைப்புகளைத் தூண்டியுள்ளன.

