இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளில் அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த கருத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் விரும்புகிறது என்று ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கருத்து தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் 3-ம் நாடு ஒன்று மத்தியஸ்தம் செய்வதற்கு இடம் அளிப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை என்பது இந்தியாவின் நிலைப்பாடு.இந்த நிலையில் நிக்கி ஹாலியின் கருத்தை இந்தியா உடனடியாக நிராகரித்தது.மேலும், “இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளில் பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத சூழலில் தீர்வு காண்பதில் மத்திய அரசின் நிலைப்பாடு மாறவில்லை” என திட்டவட்டமாக கூறி விட்டது.
ஆனால் அமெரிக்காவின் கருத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.இது குறித்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி வாஷிங்டனில் கருத்து தெரிவிக்கையில், “தெற்காசியாவில் அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்தால், அது இந்தப் பிராந்தியத்துக்கு நல்லதாக அமையும்” என குறிப்பிட்டார்.
மேலும், “அமெரிக்காவின் இத்தகைய செயலில் பாகிஸ்தான் விருப்பம் கொண்டுள்ளது. ஏனென்றால் அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவு பராமரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது” என்றும் கூறினார்.

