தேர்தலில் என்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் தோல்வி பயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், சென்னை தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரணவ ஜோதி சக்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை 6 மணியளவில் சாமி கும்பிட்டுவிட்டு, தனது பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பணப்பட்டுவாடா செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களே?
பதில்:- யாரும் கைது செய்யப்படவில்லை. வீட்டில் இருந்த பணத்தை ஆய்வு செய்துவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர்.
கேள்வி:- தொடர்ந்து 4 கட்சிகள் உங்கள் அணி மீது புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- ஒரு பொய்யை பத்து பேர் சேர்ந்து சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்களா?
கேள்வி:- பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளாரே?

பதில்:- தோல்வி பயத்தில் என்னை எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே பொய் பிரசாரம் செய்து வருகின்றன. எங்கள் வெற்றியை தடுக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள்.
கேள்வி:- வேட்பாளராகிய உங்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?
பதில்:- தேர்தல் கமிஷன் அதை பார்க்கட்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்போம்.
கேள்வி:- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
பதில்:- அவர்கள் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். மக்களை சந்திக்காமல் பல அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தின் படிக்கட்டுகளில் காத்து இருக்கிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் ஏராளமான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இருக்கிறார்கள்.
தமிழகத்திலேயே எங்கள் இயக்கம் பெரிய இயக்கம். நாங்கள் அழைத்தும் அழைக்காமலும் திருவிழா போல் தொண்டர்கள் இங்கு வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் தங்களது செலவுக்கு வைத்து இருக்கும் தொகையை பறிமுதல் செய்வது எப்படி முடியும். இதெல்லாம் பொய் பிரசாரம்.
கேள்வி:- உங்களுக்கு வெளியூரில் இருந்து பிரசாரம் செய்ய பலர் வந்திருக்கிறார்கள் என்றும் உள்ளூர் மக்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். உங்கள் கருத்து என்ன?
பதில்:- அவர் அப்படி தான் சொல்வார். உள்ளூரில் உள்ள தொண்டர்களுடன் வெளியூரில் இருந்து வந்த தொண்டர்கள் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். இது எப்போதும் தேர்தல் நேரத்தில் நடக்கும் ஒன்று தான். ஓ.பன்னீர்செல்வமும் எங்களுடன் சேர்ந்து வேலை செய்த ஒரு தொண்டர் தான். அவர் இன்று வழி மாறி சென்று இருக்கிறார்.
கேள்வி:- ‘பெரா’ வழக்கில் நீங்கள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருக்கிறார்களே?
பதில்:- தேர்தல் நேரத்தில் எப்படி செல்ல முடியும். அதனால் நாங்கள் ஆஜராவதற்கு தேதியை தள்ளி கேட்கிறோம். இன்று நேற்று போட்ட வழக்கு அல்ல. 1996-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கு. அது ஒரு முறை ‘டிஸ்சார்ஜ்’ ஆன வழக்கு. மேல்முறையீடு வந்ததால் திரும்ப நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து வரும் 7-ந் தேதி இலங்கையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழக பிரதிநிதியாக மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி பங்கேற்கிறார். இலங்கையால் கைப்பற்றப்பட்டுள்ள 136 படகுகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன், டி.எச்.சாலை 3, 2-வது தெரு, இரட்டைக்குழலி தெரு, சேனியம்மன் கோவில் தெரு, அண்ணா தெரு, ஜீவா தெரு, திலகர் நகர்(சுனாமி குடியிருப்பு), இளைய முதலி தெரு, கைலாசம் தெரு, ஏ.பி.கார்டன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த ஆட்டோவில் சென்றவாறு தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

