நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தமது நிலைப்பாட்டைப் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய பகிரங்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமெனத் தாம் முன்னெடுக்கும் செயற்பாடானது, ஜனாதிபதி தேர்தலை பிற்படுவதற்குத் துணைபோகும் ஒரு செயற்பாடாக உருவகப்படுத்தப்படுவது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பில் அண்மைக்காலமாக மேலெழுந்துள்ள உங்களது செயற்பாடுகள் தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு உத்தியாகப் பார்க்கப்படுவதோடு, தனிநபர் ஒருவரை மையப்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதாக அமைவதாகவும் விமர்சனம் செய்யப்படுகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாவதாக ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் எண்ணமோ, அல்லது அதற்கு துணைபோகின்ற நோக்கமோ எமக்கு இல்லை. அத்துடன், குறித்த எந்தவொரு நபரையும் அதிகாரத்தில் தக்கவைப்பதற்கான முனைப்புக்களும் இல்லை.
ஆகவே எமது நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்திய செயற்பாடுகளை அவ்வாறு உருவகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சில அரசியல் தரப்புக்கள் அவ்விதமான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. நாம் அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம்.
இதேநேரம், எமது அமைப்பானது, 2013ஆம் ஆண்டு மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் தலைமைத்துவத்திலான காலத்திலிருந்து நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
அதனடிப்படையில் தான் 2015ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பகுதி அளவில் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது. இவ்வாறிருக்கையில், அதன் தொடர்ச்சியாகவும் நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குமாறு வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
தற்போது ஜனாதிபதி தேர்தலொன்றுக்கான நிலைமைகள் காணப்படுகின்றமையால் பொதுவெளியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவதற்கும், மக்களிடத்தில் தெளிவுபடுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அந்த வகையில் எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதோடு நாம் கடந்த தசாப்த காலமாக ஒரேநிலைப்பாட்டில் தான் உள்ளோம். எனினும், இந்த விடயத்தினை மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
அதேநேரம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் சம்பந்தமாக தமது நிலைப்பாடுகளை வாக்கெடுப்புக்கு முற்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும் என்று பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன்.
விசேடமாக, அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஆதரிக்கின்றார்களா இல்லையா என்பதை பகிரங்கப்படுத்துவதோடு, அவர்கள் நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதாக இருந்தால் அதனை பதவியேற்று எவ்வளவு காலத்திற்குள் செய்வார்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கோருகின்றேன்.
மேலும், பொதுமக்களும், இந்த விடயம் சம்பந்தமாக சமூக மட்டத்தில் கலந்துரையாடல்களைச் செய்து நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. காரணம், ஆட்சியாளர்களை அவர்களே தீர்மானிக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் உரிய நிலைப்பாட்டை எடுப்பது அவசியமாகின்றது என்றார்.

