விடுதலைப்புலிகள் மீளுருவாக்கல்: தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கு எதிராக என்.ஐ.ஏ வழக்கு தாக்கல்

85 0

இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், உள்ளூர் திரைப்படத் துறையின் தயாரிப்பு நிர்வாகி ஒருவருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு தமிழ்நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட குறித்த வழக்கில் இதுவரை 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 14ஆவது குற்றவாளியாக ஆதிலிங்கம் என்கிற லிங்கம் என்பவருக்கு எதிராக தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க சதி செய்து செயற்பட்டதாக ஆதிலிங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வுப்பிரிவு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில், இந்த முழுமைச்சதியில் ஆதிலிங்கத்தின் பங்கு குறித்து தேசிய புலனாய்வுப்பிரிவு விரிவாக விளக்கியுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார் எனவும் அதே காலப்பகுதியில் இலங்கையர்களான குணசேகரன் மற்றும் அவரது மகன் திலீபன் உட்பட முக்கிய விடுதலைப்புலிகள் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய செயல்பாட்டாளராக இரகசியமாக பணிபுரிந்தார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், முன்னதாக 2023 ஜூன் 15, அன்று, சிறப்பு நீதிமன்றத்தில் 13 குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.மேலும், 2021 ஆம் ஆண்டில் இந்திய படைகளால் 300 கிலோ போதைப்பொருள் மற்றும் பாகிஸ்தானின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்தே 13பேரும் கைது செய்யப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.