ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் மலையக தசாப்த விசேட ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தின் 19 பிரதேச செயலகப் பிரிவுகள் 1,900 மில்லியன் ரூபாவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, சந்தை மேம்பாடு, கல்வி, குடிநீர் விநியோகம், வீதி அபிவிருத்தி வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் இந்த மலையக தசாப்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கண்டி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மலையக தசாப்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு, அவை பிராந்திய மற்றும் மாவட்ட குழுக்களால் பரிசீலிக்கப்பட்டு, அந்தக் குழுக்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரதமர் தலைமையிலான தேசியக் குழுவில் முன்வைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வருடம் ஒக்டோபர் 31ம் திகதிக்குள் அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே, கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

