எதிர்கால போராட்டங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் : கஜேந்திரகுமார்

261 0

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் குறித்து பாராமுகமாக செயற்படும் அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் போராட்ட வடிவத்தை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களினதும் தொடர் போராட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதன்படி, வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகளும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன்போது பேரவை கூட்டம் தொடர்பில் மேலும் தெரிவித்த கஜேந்திரகுமார்,

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 30, 40 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அரசாங்கம் பாராமுகமாகவே செயற்பட்டு வருகிறது.

எனவே, அரசாங்கத்தை தவிர்க்க முடியாத நிலைக்கு தள்ளும் வகையில், போராட்டவடிவங்களை மாற்றி மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

அதேவேளை, கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவமானது, பேச்சு சுதந்திரம் உள்ள நாடு என சர்வதேசத்தின் முன்னால் கூறிக் கொண்டிருக்கும் நல்லாட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.