கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில்; அனைத்து சாதிகளுக்கும் தனி இடஒதுக்கீடு; தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை; குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் ரூ.5,000 பரிசு; மொத்த சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 55-லிருந்து 17ஆக குறைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட 150 அம்சங்களுடன் பாமக நிழல் நிதி நிலை அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:
1. 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,12,617 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.1,94,146 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,00,180 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.2. நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.5,28,971 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4,51,514 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும்.
இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்காக புதிதாக வாங்கப்படும் கடன் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.3. 2024-25 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.61,103 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.16,354 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும். வருவாய்க் கணக்கில் உபரியாக இருக்கும் தொகை மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்பதால் நிதிப்பற்றாக்குறை பெருமளவில் குறைந்திருக்கிறது.
பெரும் சரிவை நோக்கி தமிழக பொருளாதாரம் – 4. 2023-24ஆம் ஆண்டில் சொந்த வரி வருவாய், மொத்த வரி வருவாய் இலக்குகளை தமிழக அரசால் எட்ட இயலாது. அதனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
5. 2023-24இல் தமிழக அரசு சொந்த வரி வருவாய் ரூ.1,81,182 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், நவம்பர் மாதம் வரை 13% வருவாய் குறைந்திருக்கிறது.
6. அதேபோல், தமிழக அரசின் மொத்த வரி வருவாய் ரூ.2,22,848 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.1.90 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
7. தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.37,540.45 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அரசின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்திருப்பதால் 15% வரை உயரும்.
8. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.92,063.72 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அது ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை நெருங்கும் என்று தெரிகிறது.

