ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

158 0

இலங்கை கடற்படை, மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று செவ்வாய்கிழமை முன்னெடுத்த சுற்றிவளைப்பில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 1,472 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. மன்னார், உப்புக்குளம் பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள் மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமை உப்புக்குளம் பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து எஞ்சிய 1,432 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 29 வயதுகளையுடைய சிலாவத்துறை மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக போதை மாத்திரைகளுடன் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.