சென்னை ரயில்வே கோட்டத்தில் 13 ரயில் நிலையங்களில் விரைவில் நடைமேம்பாலம்

53 0

சென்னை ரயில்வே கோட்டத்தில் 13 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, 10 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரயில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டு, நடைமேம்பாலம் அமைத்தல் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படுகின்றன. ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு எளிதாக செல்ல நடைமேம்பாலம் பேருதவியாக இருக்கிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கூடூர், சென்னை எழும்பூர் – விழுப்புரம், அரக்கோணம் – ஜோலார்பேட்டை, அரக்கோணம் – ரேணிகுண்டா, அரக்கோணம் – செங்கல்பட்டு இந்ததடத்தில் ரூ.55 கோடி மதிப்பில் 24 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இவற்றில், வியாசர்பாடி ஜீவா நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி முடிந்து, விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

10 ரயில் நிலையங்களில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.இவற்றை மார்ச் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ளரயில் நிலையங்களில் நடைமேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

இதுதவிர, அம்ரித் பாரத் நிலையங்கள் திட்டத்தின் கீழ், ஜோலார்பேட்டை, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், அம்பத்தூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ரூ.83 கோடி மதிப்பில் 12 மீட்டர் அகலத்தில் நடைமேம்பாலம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.