ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களில் பங்கேற்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்

29 0

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானும் உள்ளடங்குகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த வியாழக்கிழமை குறித்த பாராளுமன்ற உறுப்பினரும் நாட்டிலிருந்து சென்றுள்ளார். 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் இஷாக் ரஹ்மான் மற்றும் அமல் சிந்தக மாயாதுன்ன ஆகியோர் இவ்வாறு அவுஸ்திரேலியா சென்றுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய மக்கள் சக்தியின் சரிவு தற்போது ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலர் கலந்து கொள்கின்றனர்.

ஜனாதிபதியின் உகண்டா விஜயத்தில் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீன்ஸ் நெல்சன் கலந்து கொண்டிருந்தார். அதே போன்று அமnரிக்க விஜயத்தில் வடிவேல் சுரேசும், கியூபா விஜயத்தில் அஜித் மன்னம்பெருமவும் கலந்து கொண்டிருந்தனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா போன்ற வலுவான தலைவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிச் செல்கின்றமையானது, எதிர்க்கட்சி தலைவரின் இருப்பை கடுமையாக பாதிக்கும். இந்த நிலைமையை மாற்றாமல் உக்கிப்போன மரப்பலகைகளில் வேலி கட்டுவதால் ஏற்படக் கூடிய சரிவை தடுத்து விட முடியாது என்றும் பாலிய ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.