குமாரபுரம் படுகொலையின் 28வது நினைவேந்தல்

46 0

கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நினைவேந்தலில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளர் க.லவகுசராசா, தவத்திரு வேலன் சுவாமிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

1996ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி – குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வாள்வெட்டு தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையும் இடம்பெற்றது.

இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர், இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

அடுத்து, இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த படுகொலைச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகள் 28 ஆண்டுகளாக தமக்கு கிடைக்கப்பெறாத நீதியினை கோரி வருகின்றனர்.

இந்த இனப்படுகொலையால் பாதிப்புக்குள்ளான மக்கள், துயரிலிருந்து மீள முடியாமலும், பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றமையும் பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர்

சுப்பையா சேதுராசா

அழகுதுரை பரமேஸ்வரி

அருமைத்துரை வள்ளிப்பிள்ளை

கிட்ணன் கோவிந்தன்

அருணாசலம் தங்கவேல்

செல்லத்துரை பாக்கியராசா

வடிவேல் நடராசா

இராஜேந்திரம் கருணாகரம்

சண்முகநாதன் நிதாந்தன்

இராமஜெயம் கமலேஸ்வரன்

கந்தப்போடி கமலாதேவி

சிவக்கொழுந்து சின்னத்துரை

சிவபாக்கியம் நிசாந்தன்

பாக்கியராசா வசந்தினி

அமிர்தலிங்கம் ரஜனிகாந்தி

தங்கவேல் கலாதேவி

ஸ் ரீபன் பத்துமா

சுந்தரலிங்கம் பிரபாகரன்

சுந்தரலிங்கம் சுபாஜினி

கனகராசா சுவாதிராசா

சுப்பிரமணியம் பாக்கியம்

விநாயகமூர்த்தி சுதாகரன்

ஆனந்தன் அன்னம்மா

விஜயகாந் லெட்சுமி

அருமைத்துரை தனலெட்சுமி உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தவர்கள் ஆவர்.