உயிர்காப்பு ஆரம்ப சிகிச்சைகளை வழங்கும் “டெலிமெடிசின்” வேலைத்திட்டம் ஹொரனையில் ஆரம்பம்

131 0

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு ஆரம்ப வைத்தியசாலைகளில் நவீன தொழில்நுட்ப சாதனத்தைப் பயன்படுத்தி உயிர்காப்பு ஆரம்ப சிகிச்சைகளை வழங்கும் “டெலிமெடிசின்” வேலைத்திட்டம் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆரம்ப சுகாதார சேவை மற்றும் சிறந்த சுகாதார சேவை பராமரிப்பு ஆகிய அமைப்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கோடு சுகாதார அமைச்சு சுகாதார அமைச்சு பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளர்களை சிறந்த வசதிகள் உள்ள வைத்தியசாலையில் அனுப்புவதற்கு முன்னர் நோயாளிக்கான உயிர்காப்பு முதலுதவிகளை வழங்குவது அவசியம்.

ஆரம்ப, மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் போதியளவான வசதிகள் இன்மையால் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளர்களை தேவையான வசதிகள் உள்ள வேறு வைத்தியசாலைகளுக்கு அனுப்ப வேண்டிய தேவையுள்ளது. ஆகையால் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி நோயாளியின் உயிரைகாக்க காணொளி மூலம் சிகிச்சையளிக்கும் “டெலிமெடிசின்”  செயற்திட்டம் நேற்று முன்தினம் புதன்கிழமை ஹொரன மாவட்ட பொது வைத்தியசாலையில் நிறுவப்பட்டது.

ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்செயற்திட்டத்தின் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளிக்கு வழங்க கூடிய ஆரம்ப உயிர்காப்பு சிகிச்சைக் குறித்து விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை  மிக குறுகிய காலத்தில் காணொளி மூலமாக பெற்றுக் கொள்ள முடிவதோடு நோயாளிக்கு உரிய காலத்தில் சிகிச்சைகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.

மேலும், நோயாளியின் நோயை கண்டறிந்து சிகிச்சை மற்றும் மருந்துகளை நோயாளிக்கு வழங்க முடியும். அத்தோடு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ள வைத்தியசாலைகளில் மேற்படி செயற்திட்டத்தை நிறுவ சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதோடு இதற்கான துரித தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.