கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் மயானங்களில் மேற்கொள்ளப்படும் நல்லடக்க நடவடிக்கைகளுக்காக 10 ஆயிரம் ரூபா கட்டண அதிகரிப்பை இடைநிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எல்பர்ட் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எல்பர்ட் சம்பத் இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தில் இருக்கும் பொது மயானங்களில் நல்லடக்கத்துக்கான கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க கொழும்பு மாநகர சபை ஆணையாளர் எடுத்திருக்கும் தீர்மானம் நகர மக்களை பெரும் அசெளகரியத்துக்குள்ளாக்கி இருக்கிறது. அதனால் குறித்த கட்டண அதிகரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இருக்கும் மயானங்களில் மேற்கொள்ளப்படும் நல்லடக்க நடவடிக்கைகளுக்காக இதுவரை 1,500 ரூபாவே அறவிடப்பட்டு வந்தது. என்றாலும் தற்போது அதனை 10ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், மாநகர சபைக்கு வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை அறவிடப்பட்டுவந்த 5 ஆயிரம் ரூபா கட்டணம் 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் இந்தளவு பாரிய கட்டண அதிகரிப்பு மக்களை மேலும் கஷ்டத்துக்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகும்.
அதனால் இந்த கோரிக்கை தொடர்பாக கரிசனை செலுத்தி, குறித்த கட்டண அதிகரிப்பை நிறுத்தி, ஏற்கனவே இருந்த கட்டணத்துக்கே நல்லடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து, மாநகர மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கொழும்பு மாநகர சபையின் கீழ் இருக்கும் பிரதான பொது மயானமாக இருப்பது பொரளை பொது மயான பூமியாகும். ஏனையவை மாதம்பிட்டிய, ஜாவத்த, மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

