இலங்கையின் வான், கடல், தேச எல்லையை பாதுகாக்க அமெரிக்காவின் அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பு

25 0

இலங்கையின் வான், கடல் தேச எல்லைகளை கண்காணிக்க கூடிய அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடான நபர்களின் வருகைகளை கண்காணிப்பது போன்று, வான் மற்றும் கடல் எல்லைகளில் மீதான மீறல்கள் மற்றும் ஊடுறுவல்களை இந்த நவீன கண்காணிப்பு கட்டமைப்பு ஊடாக உடனடி தகவல்களை பெற முடியும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போதே குறித்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு இலவசமாக வழங்குவது குறித்து இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்க உள்ள உத்தேச பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக இலங்கைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நபர்கள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று உலகளாவிய தீவிரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான தகவல்கள் இந்த கண்காணிப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றமையினால் அவர்கள் இலங்கை எல்லையை எவ்வழியில் கடந்தாலும் கண்காணிக்க முடியும்.

மேலும் ஏதேனும் குற்றம் புரிந்து நாட்டை விட்டு தப்பித்து செல்ல முற்படுபவர்களையும் இந்த கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக அடையாளம் காண முடியும். எவ்வறாயினும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள குறித்த அதி நவீன எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.