ஐ.தே.க தேர்தல் செயற்பாட்டு குழு தலைவராக ரொனால்ட் பெரேரா நியமிப்பு

42 0

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார். உத்தேச ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஏனைய கட்சிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை சூழ பெரும் கூட்டணியை உருவாக்குவது இந்த குழுவின் பிரதான பொறுப்பாக உள்ளது. இதனை தவிர ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி பிரசார நடவடிக்கைகளையும் இந்த குழு முன்னெடுக்கும்.

இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் லசந்த குணவர்தன, கட்சியின் நிறைவேற்று பணிப்பாளர் ஷமல் செனரத் மற்றும் மத்திய குழு உறுப்பினர் கிறிஷான் தியடோர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் செயல்பாட்டு குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு மேலும் பல உப குழுக்களை நியமிக்கவும் ஜனாதிபதி ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்கான பிரதான அலுவலகம் மற்றும் பிரசார நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் என்பன குறித்து உடனடி அறிக்கையை கையளிக்குமாறு  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டுக் குழுவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு குழு இவ்வாரம் தொடக்கம் ஏற்கனவே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.