இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் அதனை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு,கிழக்கில் இருவேறு அமைதிவழிப்பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து கந்தசுவாமி ஆலயம் வரையில் பேரணி இடம்பெறவுள்ளதோடு, எட்டு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பங்கேற்புடன் மட்டக்களப்பு கல்லடி பாலம் தொடக்கம் காந்தி பூங்கா வரை அமைதி வழியான போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், விடுத்துள்ள அறிவிப்பில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறுப்பினர்கள் சங்கத்தின் உறவினர்களின் பங்கேற்பில் அமைதிவழிப் பேரணி மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து காந்தி பூங்கா வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தப்போராட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் தெரிவிக்கையில், 14 வருடங்களாக எங்களது போராட்டங்களை தொடர்ந்து எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றோம்.
எத்தனை ஜனாதிபதிகள் மாறிமாறி வந்தாலும் எத்தனை பிரதமர்கள் மாறி மாறி வந்தாலும் எங்களுக்கான சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருப்பது எமது உயிர்களை.
ஒவ்வொரு உயிர்களையும் தொலைத்து விட்டு வீதியில் நின்று 220 க்கு மேற்பட்ட தாய்மார்களை இழந்து நிற்கின்றோம் என்றார்.
இதேவேளை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்கேஸ்வரன், மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்பிரும் ஆதரவினை வெளிப்படுத்தவதாக அறிவித்துள்ளதோடு சமயத்தலைவர்களும் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
அதேநேரம், பிரித்தானியாவிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

