அரசியல் பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வுகாண பல தலைவர்கள் இருக்கின்றனர்!

121 0

நாட்டில்  அரசியல் பிரச்சினை இருந்தால் அதற்கு தீர்வுகாண பல தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் தற்போது பொருளாதார பிரச்சினையே இருக்கிறது. அதற்கு தீர்வுகாண ரணில் விக்ரமசிங்கவுக்கு மாத்திரமே முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபும் மாவட்ட சம்மேளனம் நேற்று  வெள்ளிக்கிழமை அநுராதபுரம் இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது பொருளாதார பிரச்சினையே இருந்து வருகிறது. அதற்கு தீர்வுகாண முடியாமல் போனதாலே நாடு வீழ்ச்சியடைந்தது. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க முன்வந்து தற்போது நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக ஸ்திர நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதனால் தற்போது நாட்டை பொறுப்பெற்க பலரும் முன்வருகிறார்கள்.

ஆனால் நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை. பொருளாதார பிரச்சினையே இருக்கிறது. அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண இன்று பல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும். அதனால் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டபின்னர் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாண மற்றவர்களுக்கு முன்வர முடியும்.

மேலும், ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஒரு கொள்கையிலேயே இருந்து வருகிறது. ஒரு ஆசனத்துக்கு செல்லும் வரை வீழ்ச்சியடைந்த போதும் கொள்கையில் உறுதியாக இருந்தோம். நாடு எதிர்கொண்டுவந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணயத்தின் உதவியை பெறுவதே ஒரே வழி என ரணில் விக்ரமசிங்க அன்று தெரிவித்தபோது, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாடு இல்லாமல்போகும் என தெரிவித்தனர். ஆனால் இறுதியில் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்ற தீர்மானத்துக்கு அனைவரும் வந்தனர்.

அதனால் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். எனவே எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாத்துக்கொள்ள நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரமடையவேண்டும். அதற்காக ரணில் விக்ரமசிங்கவை தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியில் நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.