மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமத்திபால இராஜினாமா

162 0

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவியில் விலகுவதாக தெரிவித்து அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்  திலங்க சுமத்திபால ஆகியோர்  ராஜினாமா கடித்தை நேற்று கையளித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமையவே இந்த ராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவி வகித்த நிலையில் அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு அமைச்சுப்பதவியும் பொறுப்பேற்றது, அது கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணானது என தெரிவித்து அவரை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்க கூட்டணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன் பிரகாரம் அமைச்சர் மஹிந்த அமரவீரவை நீக்கியதன் மூலம் வெற்றிடமான பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால நியமிக்கப்பட்டார்.

இந்த தீர்மானத்துக்கு எதிராக மஹிந்த அமரவீர நீதிமன்ற நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பொதுச் செயலாளர்கள் இரண்டு பேரையும் ஏற்றுக்கொள்வதில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த பிரச்சினை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியாக எந்த நடவடிக்கையும் முன்னெடுத்து செல்ல முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டது.

சிறிலங்கா சுதந்திர கட்சி மேலும் பல கட்சிகளுடன் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை கட்டியெழுப்ப தற்போது கலந்துையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பெயரை பயன்படுத்த பிரேரிக்கப்பட்டிருந்தபோதும் இந்த பொதுச் செயலாளர் பதவி பிரச்சினை அதற்கு தடையாக அமைந்தது.

அதனால் இந்த தடையை நீக்கிக்கொள்வதற்காகவே மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமத்திபால ஆகிய இருவருக்கும் இந்த பதவியில் இருந்து நீங்கிக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டதாக சிறிலங்கா சுதந்திர கட்சி உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.