தாக்குதலுக்குள்ளாகி 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வரும் மகனுக்கு நீதி கிடைக்கவில்லை

145 0

இசை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தகராறில் சந்தேக நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மகனுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என பாதிகப்பட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் ஹிக்கடுவை வேளவத்தை பிரதேசத்தை சேர்ந்த நவான்ஜன சதகெலும் என்ற 18 வயதுடைய இளைஞராவார்.

இது தொடர்பில் அவரது தாய் தெரிவிக்கையில் ,

எனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தகராறுடன் எந்தவிதத்திலும் தொடர்பற்றிருந்த எனது மகன் தலையில் சந்தேக நபர்கள் தடியால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த எனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவரின் மண்டையோட்டில் ஒரு பகுதி வைத்தியர்களினால்  அகற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவான்ஜன சதகெலுமின் உடல் நிலை பலவீனமாக இருப்பதால் அகற்றப்பட்ட மண்டையோட்டில் ஒரு பகுதியை வைத்தியர்களினால் மீண்டும் பொருத்த முடியாமல் உள்ளது.

தற்போது எனது மகன் உடல் பலவீனம் காரணமாக கடந்த 3 மாதமாக படுக்கையில் இருப்பதோடு குழாய் மூலமாக உணவுகள் வழங்கப்பட்டு வருவதோடு தொண்டையில் பொருதப்பட்டுள்ள குழாய்  மூலம் அவர் சுவாசித்து வருகின்றார்.

நவான்ஜன சதகெலுமை காப்பாற்ற மேலதிக சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் குணமடைவது உறுதி இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் நாம் பொலிஸில் முறைப்பாடு வழங்கியதையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக நவான்ஜன சதகெலுமின் தாய் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.