கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

55 0

76வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனைத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை காலி வீதி, கொள்ளுப்பிட்டி  சந்தியில் இருந்து காலிமுகத்திடல் வரையும், செரமிக் சந்தி தொடக்கம் காலிமுகத்திடல் வரையும் காலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரையும் மூடப்படும்.

அதேநேரம் குறித்த நாட்களில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் குறித்த வீதி மூடப்படவுள்ளது.

அத்துடன் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் சுதந்திர தினம் நிறைவடையும் வரையிலும் மேற்குறிப்பிட்ட வீதி மூடப்படும் என போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.