அமைதிப் போராட்டத்தை குழப்பிய குண்டர்கள் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு !

154 0

கொள்ளுப்பிட்டியில் சாத்வீக முறையில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தை குழப்பிய சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நேற்று வெள்ளிக்கிழமை (26) கலாநிதி அஜந்தா பெரேரா உள்ளிட்ட தரப்பினர்  முறைப்பாடு செய்துள்ளனர்.

கலாநிதி அஜந்தா பெரேரா உள்ளிட்ட சில சிவில் செயற்பாட்டாளர்கள் கொள்ளுப்பிட்டி லிபேர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை சாத்வீக முறையில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது முகத்தை துணியால் மூடிக்கட்டியவாறு வந்த சில குண்டர்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர்.

முகமூடி அணிந்த சில ஆண்கள் போராட்டக்காரர்களை குழப்புவதையும், அவர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவதையும் வெளிக்காட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.

குறித்து குண்டர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தாக்கப்படுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடமும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு பிரவேசித்த பொலிஸார் தலையிட்டு, குண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் நேற்று (27) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் கலாநிதி அஜந்தா பெரேரா உள்ளிட்ட தரப்பினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் நேற்று முறைப்பாடு செய்தனர்.

இது குறித்து கலாநிதி அஜந்தா பெரேரா கூறுகையில்,

“ஒரு சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்து ஒரு குழுவினரை இறக்கினர். அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தனர். பொலிஸார் அங்கிருந்து ஏன் தப்பிச் சென்றார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே திட்டமிட்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான விடயங்களை செய்வதற்கா பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் வாயை மூடுவதா முன்னோக்கிச் செல்லும் செயற்பாடு என்று கேட்கின்றேன். கொள்ளுப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் என்று அறிந்த பின்னரேயே குறித்த குண்டர்கள் குழுவினர் பெண்களை துன்புறுத்த ஆரம்பித்தனர் ”என்றார்.