பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.

149 0

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளே!

பிரித்தானியப் பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் பேரணிக்கு யேர்மனியிலும் வலுச்சேர்க்க இணைவோம்.

தம்மைத்தாமே ஆளுகை செய்யும் தகமைகொண்ட தமிழ்த்தேசிய இனமக்களாகிய எம்மை மாறி மாறி அடிமைகளாக கையாண்ட உலகச் சுரண்டல் அரசுகளின் வரிசையிலே, இறுதியாக பிரித்தானியப் பேரரசு சுதந்திரம் வழங்குவதாக கூறி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைகளை ஒருதலைப்பட்சமாக அடகுவைத்து, அதனை ஸ்ரீலங்காவின் சுதந்திர நாளாக பிரகடனப்படுத்தி வெளியேறியது உலகறிந்த வரலாற்று உண்மை.

ஸ்ரீலங்கா தனது சுதந்திர நாளாக கொண்டாடும் நாளை தமிழ் மக்கள் தமது கரிநாளாகவும், துக்க நாளாகவுமே அடையாளப்படுத்தி வருகின்றார்கள். இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீலங்காவின் 76வது சுதந்திர நாளாகவும், தமிழ்த்தேசிய இனமக்களாகிய எமது கரிநாளாகவும் அமைகிறது.

தமிழ்த்தேசிய இனமக்களாகிய எமது தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டிய முக்கியமான தீர்மான சக்தியாக பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டில் பிரித்தானிய பேரரசு புதைந்து கிடக்கின்றது. எமது உரிமைசார் விடயத்தில் உறங்குநிலை பேணும் பேரரசை விழிப்படையச் செய்யவும், பிரித்தானிய இளந்தலைமுறையிடம் முரசறையும் முகமாகவும், எதிர்வரும் 04.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிரித்தானிய பேரரசின் மன்னரை நோக்கி, தமிழ்த்தேசிய இனமக்களாகிய நாம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி உரிமைக்கான உணர்வின் பேரலையாக அணியமாகி திரட்சிகொள்ள தயாராகுவோம். இப்பேரணியிலே பங்கேற்க வாய்ப்பான யேர்மனிய வாழ் ஈழத்தமிழ் உறவுகளை அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

பிரித்தானிய பேரரசின் மன்னரை நோக்கிய இப்பேரணிக்கு வலுச்சேர்க்கவும், அதன் தார்மீக உணர்வலைகளை உலகப்பரப்பெங்கும் பிரதிபலிக்கும் வகையிலுமாக, ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளின் தொடர்ச்சியாக எதிர்வரும் 05.02.2024 (திங்கட்கிழமை) யேர்மனியின் தலைநகரில், Pariser Platz 01, Am Brandenburg Tor, Berlin எனும் முகவரியில் பி.பகல் 13.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்விலே யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளை பெரும் திரளாக இணையுமாறு அழைக்கின்றோம்.

ஸ்ரீலங்காவின் சுதந்திர நாள் தமிழ்த்தேசிய இனமக்களாகிய எமது கரிநாள் என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி, தன்னாட்சி உரிமைக்கு உரித்தான எமது தாகத்தை உணர்வலைகளால் வெளிப்படுத்தி, பன்னாட்டு இராசதந்திர செயற்பரப்பிலே உறக்கமற்ற எமது செயல்வடிவங்களை மாவீர்கள் தரும் வல்லமை கொண்டு முன்னகர்த்த உறுதி கொள்வோமாக.

“இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”
– மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.

நன்றி
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ் இளையோர் அமைப்பு,
ஈழத்தமிழர் மக்களவை,
தமிழ்ப்பெண்கள் அமைப்பு,
யேர்மனி.