சங்கடப்படுத்தும் கேள்வி – சாதுர்யமாக சமாளித்த நிக்கி

159 0

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.இரு கட்சி ஜனநாயக முறை பின்பற்றப்படும் அந்நாட்டில் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார்.

2011லிருந்து 2017 வரை தென் கரோலினா முன்னாள் கவர்னராகவும், 2017லிருந்து 2018 வரை ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றிய நிக்கி ஹாலே, குடியரசு கட்சியில் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக உட்கட்சி போட்டியில் இறங்கி உள்ளார்.ஜனவரி 22 அன்று, 52 வயதான நிக்கி ஹாலே, நியூ ஹாம்ப்ஷையர் (New Hampshire) மாநிலத்தில், சலேம் பகுதியில் உள்ள ஆர்டிசன் ஓட்டலில் தனது ஆதரவாளர்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வந்தார்.எதிர்பாராத விதமாக, அப்போது அக்கூட்டத்தில் இருந்த ஒருவர் நிக்கி ஹாலேவை நோக்கி, “நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? ” என கேட்டார்.

உடனே சிரித்து விட்ட ஹாலே, “எனக்கு வாக்களிப்பீர்களா? ” என மென்மையாக கேட்டார்.இதற்கு, “நான் டிரம்பிற்கு வாக்களிக்க உள்ளேன் ” என அந்த மனிதர் பதிலளித்தார்.

இதையடுத்து, அவரை அங்கிருந்து வெளியேறுமாறு பொறுமையாக நிக்கி கேட்டு கொண்டார்.கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட எதிர்பாராத நிலைமையை கண்ணியமாக கையாண்ட நிக்கி ஹாலேவை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, திருமணம் ஆனவர். அவரது கணவர் மேஜர். மைக்கேல் ஹாலே.இத்தம்பதியினருக்கு ரேனா எனும் மகளும், நலின் எனும் மகனும் உள்ளனர்.நேற்றைய நிலவரப்படி குடியரசு கட்சியின் உட்கட்சி போட்டியில் டொனால்ட் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனாலும், போட்டியில் இருந்து நிக்கி ஹாலே பின்வாங்கவில்லை.”